“தவெக ஆட்சியில் கேலிக்கூத்தான ஜனநாயகம்”: திமுக மகளிர் அணி மாநாட்டில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!
“தமிழக வெற்றிக் கழகத்திடமிருந்து (தவெக) தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று பொதுமக்கள் கேட்கும் அளவிற்குத் தற்போதைய தமிழகத்தின் நிலைமை வந்துள்ளது” என திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திமுக மகளிர் அணி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தவெக மற்றும் அதன் தலைமைக்கு எதிராகப் பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மாநாட்டில் பேசிய அவர், “மேடைக்கு மேடை மக்கள் மத்தியில் ‘கான்பிடண்ட்’ (நம்பிக்கை) ஆக இருக்க வேண்டும் என்று கூறும் முதலமைச்சர் விஜய், முதலில் அவர் கான்பிடண்ட்டாக இருக்கிறாரா?” என்று காரசாரமாகக் கேள்வி எழுப்பினார். மேலும், தேர்தல் முடிந்து மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மாதத்திற்குள்ளேயே, சில எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ள விவகாரத்தைச் சுட்டிக்காட்டிய அவர், தவெகவின் ஆட்சியில் ஜனநாயகம் என்பது முற்றிலும் கேலிக்கூத்தாக மாற்றப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து தவெகவின் அரசியல் செயல்பாடுகளைச் சாடிய மு.க.ஸ்டாலின், “ஏற்கனவே தீர்ந்து போன சக்திகளிடம் இருந்தே ஆட்களைத் திருடும் தவெக, உண்மையில் ஒரு காய்ந்து போன சக்தி” என்று வர்ணித்தார். தவெகவில் மாற்றுக்கட்சி நிர்வாகிகள் இணைந்து வரும் சூழலில், திமுக தலைவரின் இந்த நேரடித் தாக்குதல் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




