பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு!
பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு 6 நாட்கள் அரசு முறைப் பயணமாகப் புறப்பட்டுச் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் அந்நாட்டு அதிகாரிகள் மற்றும் இந்திய வம்சாவளியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து முறைப்படி வரவேற்றனர். இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, இன்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஸ்லோவாக்கியா நாட்டிற்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கு தனது பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்குத் திரும்புகிறார்.
பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் நெகிழ்ச்சிச் சம்பவம்
முன்னதாக, பிரதமர் மோடியை வரவேற்பதற்காகப் பிரான்ஸ் விமான நிலையத்தில் ஏராளமான இந்திய வம்சாவளியினர் திரண்டிருந்தனர். அப்போது, பிரான்ஸ் நாட்டு கலைஞர்கள் ஆடிய இந்திய பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளைப் பிரதமர் மோடி மிகவும் ஆர்வமுடன் கண்டு ரசித்தார்.
தொடர்ந்து, தன்னை வரவேற்க வந்திருந்த இந்திய வம்சாவளியினரிடையே சென்ற பிரதமர், அங்கிருந்த குழந்தைகளை அன்போடு கொஞ்சி மகிழ்ந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவன், பிரதமரைக் கண்ட உற்சாகத்தில் ஓடிவந்து அவரைப் பாசத்துடன் கட்டியணைத்துக் கொண்ட நிகழ்வு அங்கிருந்தவர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.






