இந்துக்கள் எண்ணிக்கை குறைந்தால் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு சவால் – மோகன் பகவத் எச்சரிக்கை
இந்துக்கள் எண்ணிக்கையில் குறைந்தால், அது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் சவாலாக அமையும் என மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மேலும், இந்து குடும்பங்கள் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்க் (RSS) தொண்டர்கள் கூட்டம் லக்னோவில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய மோகன் பகவத், இந்து மக்கள் தொகை சரிவு மற்றும் சமூக ஒற்றுமை குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார்.
இந்து சமுதாயம் தனது எண்ணிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றும், குடும்பங்கள் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். மக்கள் தொகை குறைந்தால் ஒரு கலாச்சாரம் அழிந்துவிடும் அபாயம் இருப்பதாகவும், நாட்டின் மக்கள் தொகை சமநிலையில் ஏற்படும் மாற்றம் கவலைக்குரியதாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்துக்கள் எண்ணிக்கையில் குறையும்போது அது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் கலாச்சாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்த அவர், இந்து சமுதாயத்திற்குள் உள்ள சாதி ரீதியான பிளவுகள் நீங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், “ஒரே கிணறு, ஒரே கோயில், ஒரே சுடுகாடு” என்ற நிலையை நோக்கி இந்துக்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நவீன காலத்தில் குடும்ப உறவுகள் சிதைந்து வருவதாகக் குறிப்பிட்ட மோகன் பகவத், குழந்தைகளுக்கு தர்மம் மற்றும் தேசபக்தி குறித்த கல்வியை வீடுகளிலேயே வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.