உறங்கியவர்கள்மீது தண்ணீர் பீய்ச்சி: மாநகராட்சி ஊழியர்களுக்கு எதிராக கண்டனம்
கோவை அரசு மருத்துவமனை அருகே உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனை அருகிலுள்ள வளாகத்தில் இரவு நேரங்களில் பலர் தங்கியிருந்து உறங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், அப்பகுதியில் சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கிருந்து செல்லுமாறு உறங்கிக் கொண்டிருந்தவர்களிடம் ஊழியர்கள் கேட்டுக்கொண்டதாகவும், அவர்கள் உடனடியாக செல்ல மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஊழியர்கள் பைப் குழாய் மூலம் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் வெளியானதையடுத்து, சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆதரவற்ற மற்றும் ஏழை மக்களிடம் இவ்வாறு மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டது வருத்தமளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.