மாநகராட்சியின் மெத்தனத்தால் வெள்ளக்காடான நெல்லை – பள்ளிகளுக்கு மழை விடுமுறை
தென் மாவட்டங்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள ஆரஞ்சு எச்சரிக்கை இன்றும் தொடர்கிறது. வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.
கனமழையால் திருநெல்வேலி நகரம் பல இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியது. மாநகராட்சி நிர்வாகம் முன்கூட்டியே மழைநீர் கால்வாய்கள், சாக்கடைகள், வடிகால்களை சுத்தம் செய்யாததால், ஒரே நாளின் மழைக்கே நகரம் முழுவதும் தண்ணீர் தேங்கியது. இதனால், வாகனப் போக்குவரத்தும், நடைபாதை வியாபாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
திருநெல்வேலி டவுன் தெற்கு ரதவீதி, வண்ணார்பேட்டை, வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலைகள் உள்ளிட்ட பல பகுதிகளில் சாக்கடை நீரும் மழைநீரும் கலந்து துர்நாற்றம் வீசியது. வாகனங்கள் மெதுவாக நகர வேண்டிய நிலை ஏற்பட்டது.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நம்பியாறு அணையில் 68 மி.மீ., நாங்குநேரியில் 67 மி.மீ., பாளையங்கோட்டையில் 56 மி.மீ., ராதாபுரத்தில் 54 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கனமழையால் நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி, ராதாபுரம், சேரன்மகாதேவி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, முக்கூடல் உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மழையால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றாலம், மணிமுத்தாறு உள்ளிட்ட அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் நகரம் முழுவதும் வெள்ளக்காடானதற்கு திருநெல்வேலி மாநகராட்சியின் மெத்தனமே காரணம் என்று பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.