“பாமக தொடங்கியபோது இப்படியெல்லாம் நடக்கும் என தெரியாது” – ராமதாஸ் விரக்தி

“எனது உழைப்பால் உருவாக்கப்பட்ட பாமகவுக்கு யாரும் உரிமை கோர முடியாது. கட்சி தொடங்கியபோது இப்படியெல்லாம் நடக்கும் என எனக்கு தெரியாது” என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் இன்று (அக். 16) செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

“12 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதையொட்டி இருதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய் சீராக உள்ளதா என்பதை உறுதி செய்ய, சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றேன். மருத்துவர்கள் ‘நலமாக உள்ளீர்கள்’ என தெரிவித்தனர்.

மொத்தம் 82 அரசியல் தலைவர்கள், நண்பர்கள் நேரிலும் தொலைபேசியிலும் நலம் விசாரித்தனர். புதிதாக உருவான கட்சியினர் சிலர் மட்டும் வரவில்லை. நான் ஒருபோதும் ஐசியுவில் இல்லை. ஐசியு செல்லும் நிலையே வரவில்லை.

அன்புமணி கூறியிருக்கும் ‘அய்யா ஐசியுவில், நாடகம் நடக்கிறது’ என்ற பேச்சு தமிழக மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. “அய்யாவுக்கு ஏதாவது ஆச்சு என்றால் தொலைத்து விடுவேன்… சும்மா இருக்க மாட்டேன்… துப்பு இல்லாதவர்கள் நாடகம் நடத்துகிறார்கள்” என பேசியுள்ளார். இத்தகைய சொற்கள் படிக்காத மாடு மேய்க்கும் சிறுவனிடமிருந்தும் வராது. அதனால்தான், தலைமை பண்பு அன்புமணிக்கு இல்லை என முன்பே சொன்னேன்.

எனது உழைப்பால் உருவாக்கப்பட்ட பாமகவுக்கு யாருக்கும் உரிமை இல்லை. ‘என் கட்சி’ என்று கூறுவது தவறு. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தையும், நீதிமன்றத்தையும் அணுகுவோம். கட்சி தொடங்கியபோது இப்படிப்பட்ட நிலை வருமென நினைக்கவில்லை.

பாமகவுக்கும் அன்புமணிக்கும் இனி எந்தத் தொடர்பும் இல்லை. அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர். இப்போதும் உரிமை கோருவது தவறு. பாமக பெயரைப் பயன்படுத்தக் கூடாது. ஆனால், ‘இனிஷியல்’ போடுவதில் எனக்கு ஆட்சேபம் இல்லை.

அன்புமணிக்கு தன்னுடைய கூட்டத்துடன் புதிய கட்சி தொடங்கச் சொல்லி மூன்று முறை கூறியுள்ளேன். அவருக்கு அதில் பொறுப்பு கிடைக்கலாம் — ஆனால் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகள் கிடைக்காது.

சட்டப்பேரவையில் பாமக தலைவராக ஜி.கே. மணி, கொறடாவாக அருள் தொடர்வார்கள். அன்புமணி தரப்பினர் எவ்வளவு போராடினாலும் எந்த மாற்றமும் ஏற்படாது.

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறிய “தந்தையையும் தாயையும் காப்பாற்ற முடியாதவர் தமிழகத்தை காப்பாற்றப் போகிறார்” என்ற கூற்று 100% உண்மை. இதே கருத்தை தமிழகத்தின் பல தலைவர்களும் கூறியுள்ளனர்.

கரூர் துயரச் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்தது வழக்கை முடிக்கவா அல்லது இழுத்தடிக்கவா என்பது பார்க்க வேண்டிய விஷயம்.

தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை வரும் டிசம்பர் 30ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் எனக்கு வழங்குவார்கள். இந்த முறை கூட்டணி உறுதியானதாக இருக்கும்,” என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box