“திமுகவுக்கு தாளம் போடுபவர்களுக்கு ஆதரவாக ஜனநாயகப் படுகொலை செய்வதா?” – சபாநாயகர் மீது அன்புமணி காட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர், துணைத் தலைவர், கொறடா ஆகிய பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டோரை பேரவைத் தலைவர் அப்பாவு அங்கீகரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

“பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட விவரத்தை சட்டப்பேரவைத் தலைவருக்கு முறைப்படி அறிவித்து 22 நாள்கள் ஆகின்றன. ஆனால், இன்னும் அதற்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இது கண்டிக்கத்தக்கது.

சட்டப்பேரவையில் திமுகவுக்கு தாளம் போடுபவர்களுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்கும் பேரவைத் தலைவரின் நடத்தை ஜனநாயகப் படுகொலைக்கு சமமானது. இது மக்களால் மன்னிக்கப்படாது.

செப்டம்பர் 24ஆம் தேதி பா.ம.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் ஜி.கே. மணியை தலைவராக இருந்து விடுவித்து, தருமபுரி தொகுதி எம்.எல்.ஏ எஸ்.பி. வெங்கடேஸ்வரனை புதிய தலைவராகவும், மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவத்தை துணைத்தலைவராகவும், மயிலம் எம்.எல்.ஏ சி. சிவக்குமாரை கொறடாவாகவும் தேர்வு செய்தோம்.

இத்தகவலை சட்டப்பேரவைத் தலைவருக்கு முறைப்படி கடிதம் எழுதி அனுப்பியிருந்தோம். ஆனால், இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேசமயம், ஜி.கே. மணி இன்னும் பா.ம.க. சட்டப்பேரவைக் குழுத் தலைவராகக் கூறிக் கொண்டு பேச அனுமதி பெறுகிறார் என்பது முறையல்ல.

சட்டப்பேரவைத் தலைவர் தொடர்ந்து ‘ஆய்வு செய்து வருகிறேன்’ என்றே கூறி வருகிறார். இதில் ஆய்வு செய்ய என்ன இருக்கிறது? பா.ம.க.க்கு தற்போது நால்வர் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் மூவர் ஒன்றாகக் கூடி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்துள்ளனர். அவர்களும் நேரடியாகப் பேரவைத் தலைவரைச் சந்தித்து மனு அளித்துள்ளனர். இதற்குப் பிறகும் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது ஜனநாயகத்துக்கு விரோதம்.

ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆன திமுக அரசு மக்களுக்கு ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்யாமல், விளம்பரங்கள் மற்றும் நாடகங்களின் மூலமாகவே நேரம் கழித்து வருகிறது. அதற்காகவே, பேரவையின் உள்ளேயும் வெளியேயும் தாளம் போடுபவர்களை வைத்துள்ளது.

அவ்வாறு தாளம் போடுவோரை பாதுகாக்கும் நோக்கத்தில்தான் பா.ம.க. சட்டப்பேரவை நிர்வாகிகளை அங்கீகரிக்காமல் தாமதப்படுத்தப்படுகிறது. வலிமையாக செயல்படும் கட்சிகளை உடைத்து, அதிலிருந்து சிலரை தங்களுக்காகப் பயன்படுத்துவது திமுகவின் பழைய கலை. அதையே பா.ம.க. மீதும் பயன்படுத்துகிறது.

திமுகவின் இந்தக் கருவியாக செயல்படுவோருக்கு பாதுகாப்பு அளிக்கவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது எனது முந்தைய குற்றச்சாட்டை உறுதிப்படுத்துகிறது.

ஒருபுறம் ஆளுநர் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கக் காலவரையறு நிர்ணயிக்க வேண்டும் என முழங்கும் திமுக, மறுபுறம் பேரவை நிர்வாகிகள் நியமனத்தில் ‘ஆய்வு செய்து வருகிறோம்’ என கூறுவது எந்த நீதி? தங்களுக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிகளுக்கு வேறு நீதி என்பதே திராவிட மாடல் அரசின் கொள்கையா?

பேரவைத் தலைவர் தேர்வானவுடன் அரசியல் அடையாளத்தை மறந்து நடுநிலையுடன் செயல்பட வேண்டும். முன்னாள் பேரவைத் தலைவர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

ஆகையால், ஆளுங்கட்சியின் விருப்பப்படி ஜனநாயகப் படுகொலை செய்வதை நிறுத்தி, பா.ம.க. சட்டப்பேரவைக் குழுத் தலைவர், துணைத்தலைவர், கொறடா ஆகிய பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டோரை பேரவைத் தலைவர் அப்பாவு உடனடியாக அங்கீகரிக்க வேண்டும். இதைத் தவிர்த்தால், ஜனநாயகத்தைக் காக்க பா.ம.க. போராட்டம் நடத்த தயங்காது” என அன்புமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box