கீழடி அகழாய்வில் குறைபாடு: மக்களவையில் மத்திய அரசு விளக்கம்

தமிழகத்தின் கீழடியில் 2014–15 மற்றும் 2015–16 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி தொடர்பான அறிக்கை, 2023 ஜனவரியில் இந்திய தொல்லியல் துறைக்கு கிடைத்ததாகவும், அது தற்போது நிபுணர் பரிசீலனையில் உள்ளதாகவும் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் தெரிவித்தார். மேலும், அந்த அகழாய்வு முறைகளில் சில குறைபாடுகள் இருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையின் பரிசீலனை நடைமுறைகள், அதன் பணிச்சார்ந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்கான அவசியமான செயல்முறையாகும். இந்த ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து குறை கூறும் நோக்கமோ, அல்லது அறிக்கை வெளியீட்டில் தாமதம் செய்யும் நோக்கமோ எங்களிடம் இல்லை,” என்றார்.

முதல் இரண்டு கட்டங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி அறிக்கைகள், காலவரிசை, விளக்கங்கள், முன்னிலைப்படுத்தும் முறை, விரிவான பகுப்பாய்வு உள்ளிட்ட அம்சங்களில் குறைபாடுகள் உள்ளதாகவும், இது தொடர்பான தகவல்கள் அகழாய்வுக் குழு தலைமைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

2014 முதல் 2017 வரை, கீழடி பகுதியில் தொல்லியல் பொருட்கள் இருப்பதற்கான சாத்தியம் கருதி இந்திய தொல்லியல் துறை அகழாய்வு செய்தது. 2018 முதல் தமிழக தொல்லியல் துறை தொடர்ந்து பணிகளை மேற்கொண்டது. ஆனால், இவ்வகை பணிகளுக்கான இறுதி அறிக்கை மாநில அரசு இதுவரை வெளியிடவில்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, மத்திய தொல்லியல் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்ட கீழடி ஆய்வறிக்கை அங்கீகரிக்கப்படாமல், திருத்தம் கோரி திருப்பி அனுப்பப்பட்டிருந்தது. இதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்கள் உலக அளவிலான ஆய்வகங்களில் கரிமப் பகுப்பாய்வுக்குப் பின் AMS அறிக்கைகள் அளித்தும், மேலும் சான்றுகள் தேவை என மத்திய அரசு கூறுவதை அவர் விமர்சித்தார்.

மேலும், “வரலாற்றாய்வாளர்கள், தொல்லியல் நிபுணர்கள் எதிர்க்கும் நிலையிலும் பாஜக, கற்பனையான சரஸ்வதி நதி நாகரிகத்தை ஆதரிக்கிறது; ஆனால் கீழடி வெளிப்படுத்தும் தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை புறக்கணிக்கிறது. இது, சான்றுகள் இல்லாததால் அல்ல; கீழடி காட்டும் உண்மை, அவர்கள் உருவாக்கும் கதைச் சூழலுக்கு எதிரானதால். எங்கள் வரலாற்றை வெளிக்கொணர பல நூற்றாண்டுகள் போராடினோம்; அதை மறைத்து அழிக்க தினமும் முயல்கிறார்கள். ஆனால், உலகமும் காலமும் அதை பார்த்துக்கொண்டே இருக்கிறது,” என்று முதல்வர் பதிவிட்டிருந்தார்.

Facebook Comments Box