பாஜக நிர்வாகியைத் தாக்க முயற்சி – அடையாளம் தெரியாத நபருக்கு போலீஸ் தேடுதல்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதியில், பாஜக மாவட்ட நிர்வாகியை அவமதித்து தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரைப் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்த விஜயவீரன் என்பவர், பாஜக மாவட்ட அளவிலான பொறுப்பில் இருந்து வருகிறார். இவர் ஜெயங்கொண்டம் அருகிலுள்ள ஒரு உணவகத்திற்கு சென்றிருந்த போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கட்சியின் பெயரை குறிப்பிட்டு விஜயவீரனை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர், அந்த நபர் நாற்காலியை எடுத்துக் கொண்டு விஜயவீரனை தாக்க முயன்றதாகவும், அச்சமயம் அங்கிருந்து தப்பியோடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விஜயவீரன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.