தீபாவளி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கூடாரம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைக்கும் நோக்கில், எழும்பூர் ரயில் நிலையத்தின் முன்புறத்தில் காத்திருக்கும் பயணிகளுக்காக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தமிழகத்தின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களுடன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் தினசரி 50-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், இந்த நிலையம் வழியாக மின்சார ரயில்களும் இயக்கப்படுவதால், தினசரி சுமார் ஒரு லட்சம் பேர் இங்கு வந்து செல்கின்றனர். பண்டிகை காலங்களில் இந்த நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும் நிலை ஏற்படும்.
அதைத் தவிர்க்கும் வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில் நிலையத்தின் முன்புறத்தில் பயணிகளுக்கான காத்திருப்போர் பகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்ததாவது: “சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் ‘ஹோல்டிங் ஏரியா’ என்ற முயற்சியின் கீழ் பயணிகளுக்கான காத்திருப்போர் பகுதிகள் அமைக்கப்படுகின்றன.
அந்த வகையில், எழும்பூர் ரயில் நிலையத்தின் முன்புறத்தில் மின்விசிறி மற்றும் அமர்விற்கான இருக்கைகளுடன் கூடிய காத்திருப்போர் பகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில் நிலையத்தின் உட்பகுதியில் கூட்ட நெரிசலை குறைக்க முடியும்” என அவர்கள் தெரிவித்தனர்.