கரூர் தவெக கூட்டத்தில் 500 போலீஸார் இருந்ததாக தெரியவில்லை: பழனிசாமி குற்றச்சாட்டு

கரூரில் உயிரிழப்புகளுக்குக் காரணம் அரசின் அலட்சியம் என்றும், தவெக கூட்டத்தில் 500 போலீஸார் இருந்ததாக தெரியவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

“அரசின் அலட்சியத்தாலும், காவல்துறை பாதுகாப்பின்மையாலும் கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். கரூரில் பரப்புரையில் தவெக தலைவர் விஜய் பேசத் தொடங்கிய 10 நிமிடங்களில் செருப்பு வீசப்பட்டது. இந்த கூட்டத்தில் அசம்பாவிதம் ஏற்படவேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு வேலுச்சாமிபுரத்தை பரப்புரைக்கு வழங்கியுள்ளது.

முன்பு காவல்துறை ஏடிஜிபி, தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்தில் 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதாக கூறினார். ஆனால் இன்றைக்கு சட்டப்பேரவையில் முதல்வர், 660 போலீஸார் பணியில் இருந்ததாக தெரிவித்தார். காவல்துறை எண்ணிக்கையிலேயே முரண்பாடு உள்ளது.

மேலும் தொலைக்காட்சி காட்சிகளில் பார்த்தபோது அந்த கூட்டத்தில் 500 போலீஸார் இருந்ததாக தெரியவில்லை — அது தெளிவாக தெரிகிறது. அடுத்த நாள் காலை 8 மணிக்கு நான் கரூர் சென்றபோது, 31 பேருக்கு உடற்கூறாய்வு முடிந்துவிட்டது. இவ்வளவு வேகமாக எப்படி முடிந்தது? ஏன் ஒரு நபர் விசாரணை ஆணையம் விரைவாக அமைக்கப்படுகிறது? இது உண்மையை மறைக்கும் நாடகம் போன்றது.

முழுமையான பாதுகாப்பு இருந்திருந்தால் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது. சட்டப்பேரவையில் அதிமுக பேசிய பிறகு முதல்வர் பதில் சொல்லியிருக்கலாம்; ஆனால் எனக்கு பேச வாய்ப்பு கொடுக்காமல் முதல்வர் தானாகவே நடவடிக்கைகளைப் பற்றி கூறுகிறார். ஏன் இந்த பதற்றம்? இதன் பின்னால் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. சிபிஐ விசாரணையை நினைத்து ஆளுங்கட்சி பயப்படுகிறது,” என பழனிசாமி தெரிவித்தார்.

Facebook Comments Box