கல்வி வளாகங்களுக்குள் மதம் சார்ந்த அடையாளங்களுக்குத் தடை: தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!
கல்வி வளாகங்களுக்குள் மதம் சார்ந்த அடையாளங்களோடு யாரும் வரக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியிருப்பது, தமிழகத்தின் பாரம்பரியக் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் மீது தொடுக்கப்பட்ட நேரடித் தாக்குதல் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாணவர்களின் கலாச்சார உரிமைகளையும் வழிபாட்டு சுதந்திரத்தையும் நசுக்க நினைக்கும் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் இந்த அறிவிப்பு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25 வழங்கியுள்ள மதச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார். பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, மாணவர்களின் சுய அடையாளங்களை அழிக்கும் கூடாரமாக மாறக்கூடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், முற்போக்கு என்ற போர்வையில் காலாவதியான நாத்திகக் கொள்கைகளை திணிக்கும் இந்த அறிவிப்பை தவெக அரசு உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், மக்கள் ஜனநாயக ரீதியில் திரண்டெழுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.






