பாகிஸ்தானுக்கு எதிராகத் திரும்பிய கத்தி: பாக்.கின் உண்மை முகத்தை உலக அரங்கில் அம்பலப்படுத்தும் பிஓகே (POK) மக்கள்!
ஒரு காலத்தில் இந்தியாவிற்கு எதிராகப் பொய்ப் பிரச்சாரம் செய்யப் பாகிஸ்தான் அரசால் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்பட்ட ஆசாத் காஷ்மீர் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) மக்கள், தற்போது பாகிஸ்தானுக்கு எதிராகவே போர்க்கொடி தூக்கியுள்ளனர். தங்களை இத்தனை காலம் ஏமாற்றி வந்த பாகிஸ்தானின் வஞ்சக முகத்தை அவர்கள் உலக அரங்கில் வெளிச்சம் போட்டுக் காட்டத் தொடங்கியுள்ளனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மிர்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை, பாகிஸ்தான் அரசு ஆரம்பம் முதலே இந்தியாவின் காஷ்மீர் விவகாரத்திற்கு எதிராகத் தனது முக்கியத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி வந்தது. அங்கு வசித்த அப்பாவி மக்களை மூளைச்சலவை செய்து, இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களைப் பேச வைத்தது. ஆனால், தங்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்றுத் துரோகத்தை உணர்ந்த அதே மிர்பூர் பகுதி மக்கள்தான், தற்போது பாகிஸ்தானுக்குப் பிரதான தலைவலியாக மாறியுள்ளனர்.
மங்களா அணை விவகாரமும் பிரிட்டன் குடியேற்றமும்
பாகிஸ்தானின் இந்தச் சூழ்ச்சி வரலாறு 1961-ஆம் ஆண்டு தொடங்கியது. அந்த ஆண்டில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மிர்பூர் மாவட்டத்தில் ‘மங்களா’ என்ற பிரம்மாண்ட அணை கட்டும் பணியைப் பாகிஸ்தான் அரசு தொடங்கியது. சுமார் 3,140 மீட்டர் நீளமும், 147 மீட்டர் உயரமும் கொண்ட இந்த அணையின் கட்டுமானத்தால், அப்பகுதியில் இருந்த 280-க்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றிலும் மூழ்கின. இதனால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான காஷ்மீரி மக்கள் தங்களின் வாழ்விடங்களை இழந்து நடுத்தெருவிற்குத் தள்ளப்பட்டனர்.
அப்போது இந்த அணை கட்டுமானப் பணியில் பிரிட்டன் அரசும் ஒரு முக்கியப் பங்காளியாக இருந்தது. இதன் காரணமாக, நிலங்களை இழந்த காஷ்மீரி மக்கள் தங்களது நாட்டிற்கு வந்து வேலை செய்வதற்கான பணி அனுமதி விசாக்களை பிரிட்டன் வழங்கியது. இதனைப் பயன்படுத்தி மிர்பூரிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் லண்டன் உள்ளிட்ட நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர். நாளடைவில் அவர்கள் தங்களது உறவினர்களையும் அங்கு அழைத்துக்கொண்டனர். தற்போதைய நிலவரப்படி, பிரிட்டனில் வாழும் ஒட்டுமொத்த பாகிஸ்தானிய வம்சாவளியினரில் 70% பேர் இந்த மிர்பூர் பகுதியைச் சேர்ந்தவர்களே ஆவர்.
லண்டனில் அரங்கேறிய பாகிஸ்தானின் அரசியல் சூழ்ச்சி
பிரிட்டன் சென்ற இந்த மக்கள் வெறும் உடல் உழைப்பாளர்களாக மட்டும் நின்றுவிடாமல், கடின உழைப்பால் அந்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் முடிவுகளைத் தீர்மானிக்கும் பிரதான சக்தியாகவும், முக்கிய வாக்கு வங்கியாகவும் உருவெடுத்தனர். இந்த இடத்தில்தான் பாகிஸ்தான் அரசு தனது சூழ்ச்சி வலையை வீசியது. லண்டன் போன்ற முக்கிய நகரங்களில் செல்வாக்குடன் வாழ்ந்து வந்த இந்த காஷ்மீரி மக்களை மூளைச்சலவை செய்து, இந்தியாவிற்கு எதிரான போராட்டங்களையும், பேரணிகளையும் பாகிஸ்தான் ஒருங்கிணைத்தது. பிரிட்டிஷ் அரசியல்வாதிகளும் இவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, இந்தியாவிற்கு எதிராகப் பேசத் தொடங்கினர்.
இவ்வாறாக, ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களும் இந்தியாவிற்கு எதிராகவும், தங்களுக்கு ஆதரவாகவும் இருப்பது போன்ற ஒரு போலித் தோற்றத்தைப் பாகிஸ்தான் அரசு சர்வதேச அளவில் கட்டமைத்து வந்தது.
இரட்டை வேடம் கலைந்தது: மக்கள் புரட்சி!
ஆனால், பாகிஸ்தானின் தவறானப் பொருளாதாரக் கொள்கைகளால் மிர்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வறுமை தாண்டவமாடியது. கோதுமை மாவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டதால், வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கினர். காஷ்மீரிகளின் உரிமைக்காகப் பாடுபடுவதாக அதுவரை சர்வதேச அரங்கில் நடித்து வந்த பாகிஸ்தான், போராடிய சொந்த மக்கள் மீதே கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி, பலரை கொன்று குவித்து, அவர்களின் அரசியல் உரிமைகளை நசுக்கியது.
பாகிஸ்தான் அரசின் இந்த அராஜகத்தையும், சொந்த மக்கள் மீதான அடக்குமுறையையும் கவனித்த இங்கிலாந்து வாழ் மிர்பூர் மக்கள் கொதித்தெழுந்தனர். பாகிஸ்தான் இத்தனை நாளாகத் தங்களைத் தங்களின் சுயலாபத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வந்தது என்பதை அவர்கள் முழுமையாகப் புரிந்துகொண்டனர்.
இதனையடுத்து, தங்களை ஒடுக்கும் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகப் பிரிட்டனில் அவர்கள் தற்போது தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஒரு காலத்தில், இந்தியாவைப் பற்றி உலக நாடுகளிடம் அவதூறுகளைப் பரப்பப் பாகிஸ்தான் எந்த மக்களை ஆயுதமாகப் பயன்படுத்தியதோ, அதே மக்களே இன்று பாகிஸ்தானின் அஸ்திவாரத்தை சர்வதேச அரங்கில் அசைக்கத் தொடங்கியுள்ளனர் என்பதுதான் காலத்தின் கட்டாயம்.






