பழனி முருகன் கோவில் நிர்வாகம் வணிக நோக்கில் செயல்பட்டுள்ளது: அமைச்சர் ரமேஷ் அதிரடி சாடல்!
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் கடந்த ஐந்து ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு செயல்பாடுகள் முற்றிலும் வணிக ரீதியாகவும், வியாபார நோக்கத்தோடும் அமைந்துள்ளன என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பழனி முருகன் கோவிலில் அமைச்சர் ரமேஷ் முன்னிலையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, வி.ஐ.பி (VIP) தரிசன முறையை முற்றிலுமாகத் தவிர்த்த அமைச்சர், பொது மக்கள் செல்லும் வரிசையில் நின்று சாதாரண பக்தராகச் சுவாமி தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, கோவிலில் வழங்கப்பட்ட அன்னதானத்தில் பொது மக்களுடன் ஒன்றாக அமர்ந்து அமைச்சர் உணவருந்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷ், கடந்த ஆட்சிக் காலத்தில் ஆன்மீக நோக்கத்தைத் தாண்டி, கோவில் நிர்வாகத்தின் செயல்பாடுகள் வணிக நோக்கத்தோடு மட்டுமே கையாளப்பட்டுள்ளது தற்போதைய ஆய்வில் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். இத்தகைய முறைகேடுகளைக் களைந்து, சாமானிய பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.





