புதுக்கோட்டை: விதிமுறைகளை மீறி செயல்பட்ட 8 கல்குவாரிகளை மூட அதிகாரிகள் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், மாநிலம் முழுவதும் உள்ள குவாரிகளை தீவிரமாக ஆய்வு செய்ய அமைச்சர் பிரபு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த உத்தரவின் பேரில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்குவாரிகளில் கனிமவளத்துறை மற்றும் புவியியல், சுரங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆய்வின் போது, மாவட்டத்தில் 8-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் எவ்வித அரசு அனுமதியும் இன்றி, விதிமுறைகளை முற்றிலும் மீறி செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முதல்கட்ட நடவடிக்கையாக அந்த 8 குவாரிகளையும் உடனடியாக மூட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், விதிகளை மீறி சட்டவிரோதமாக இயங்கிய இந்த குவாரிகளுக்கு கடுமையான அபராதம் விதிப்பதற்கான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளையும் அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.






