பணமோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்!
கடந்த 2011-2015 காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது, போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகக் கூறி அமலாக்கத்துறையும் விசாரணையில் இறங்கியது. இந்த நிலையில், இந்த பணமோசடி வழக்கில் செந்தில்பாலாஜிக்கு எதிராக முறைப்படி வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி தமிழக அரசு ஆளுநருக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியுள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு மே மாதமே இந்த வழக்கில் ஆளுநரின் ஒப்புதலைப் பெற அமலாக்கத்துறை நேரடியாக அனுமதி கோரியிருந்தது. ஆனால், சம்பந்தப்பட்ட மாநில அரசின் மூலமாக மட்டுமே ஆளுநருக்கு அனுமதி கடிதம் அனுப்பப்பட வேண்டும் என்ற விதிமுறையைக் கூறி அந்த விண்ணப்பம் அப்போது திருப்பி அனுப்பப்பட்டது. மேலும், செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்த காரணத்தினால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்வதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கடந்த மாதம் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த சட்டப் போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையாக, செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடர அனுமதிக்குமாறு தமிழக அரசின் மூலமாக ஆளுநருக்கு தற்போது கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் முறையான ஒப்புதலுடன் இந்த அனுமதிக் கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




