10 ஆண்டுகள் கறையற்ற சேவை: சென்னை மாநகர காவல் ஆளிநர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களை ஆணையர் வழங்கினார்!
சென்னையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் இடமளிக்காமல், மிகச் சிறப்பாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றிய காவல் ஆளிநர்களைக் கௌரவிக்கும் விதமாக “தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்கள்” வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில், சென்னை மாநகர காவல் ஆணையர் கலந்துகொண்டு தகுதிவாய்ந்த காவல் துறையினருக்கு விருதுகளையும் பதக்கங்களையும் வழங்கித் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்த விழாவில் மோட்டார் வாகனப்பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரிவுகளில் பணியாற்றி, கடந்த 10 ஆண்டுகளில் எவ்வித ஒழுங்கு நடவடிக்கைக்கும் உள்ளாகாமல் கறையற்ற சேவை புரிந்த காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். தங்களது கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைத்து, காவல் ஆணையரின் கைகளால் விருதுகளைப் பெற்ற காவல் ஆளிநர்கள், அவரோடு இணைந்து நெகிழ்ச்சியுடன் குழுப் புகைப்படம் எடுத்துத் தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து விழா மேடையில் உரையாற்றிய சென்னை காவல் ஆணையர், பிற அரசுத் துறைகளைக் காட்டிலும் பொதுமக்களால் மிக எளிதாக அடையாளம் காணக்கூடிய மற்றும் அணுகக்கூடிய ஒரு துறையாகக் காவல் துறை விளங்குவதாகக் குறிப்பிட்டார். மேலும், உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஒரே மாதிரியான சீருடை வழங்கப்பட்டிருப்பது நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் விஷயம் என்றும், இந்தச் சீருடையின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.



