குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: மேற்காசியாவில் மீண்டும் கடும் பதற்றம்!
வாஷிங்டன்:
குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில், அதற்குப் பதிலடியாக ஈரான் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல் நடத்தி வருவதால் மேற்காசியாவில் மீண்டும் உச்சக்கட்டப் பதற்றம் உருவாகியுள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்த போதிலும், அமெரிக்கா-ஈரான் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தொடர்ந்து பெரும் இழுபறி நீடித்து வருகிறது.
இதற்கிடையே, வளைகுடா நாடுகளை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் (Drone) தாக்குதல்களைத் தங்களது படைகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக அமெரிக்க ராணுவம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. மேலும், ஈரானின் கெய்ஷ்ம் தீவு மீது அமெரிக்கா பதில் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதால், அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் தொய்வு ஏற்பட்டு போர்ச் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளது.





