புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய செயலாளரிடம் ஒப்படைப்பு: விஜயபாஸ்கர் படம் அகற்றம்!
புதுக்கோட்டை:
அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசலின் எதிரொலியாக, புதுக்கோட்டை அதிமுக அலுவலகத்தின் சாவி புதிய மாவட்டச் செயலாளரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எஸ்.பி.வேலுமணி அணியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி நீக்கியதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மாற்றப்பட்டு, புதிய செயலாளராக பழனிவேல் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு எதிராக சி.விஜயபாஸ்கர் தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டதால், வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இப்பேச்சுவார்த்தையின் முடிவில், கட்சியின் புதிய மாவட்டச் செயலாளர் பழனிவேலிடம் அலுவலகச் சாவி ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மேளதாளங்களுடன் திரண்ட தொண்டர்கள் புடைசூழ வருகை தந்த பழனிவேல், பூட்டப்பட்டிருந்த அதிமுக அலுவலகத்தைத் திறந்து வைத்தார். அப்போது, அலுவலகத்தின் உள்ளே இருந்த சி.விஜயபாஸ்கரின் புகைப்படம் பொறிக்கப்பட்ட பேனரை அங்கிருந்த அதிமுகவினர் அதிரடியாகக் கிழித்து அகற்றினர். இதனிடையே, கட்சியின் ஒற்றுமையைக் கருதி அலுவலகச் சாவியைத் தான் பெருந்தன்மையுடன் ஒப்படைத்ததாக சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.




