தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று முறைப்படி பதவியேற்பு!
சென்னை:
தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியாக (DGP) மகேஷ்குமார் அகர்வால் இன்று அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுக் கொண்டார். தமிழக டிஜிபியாகப் பணிபுரிந்த சங்கர் ஜிவால் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அப்போதைய திமுக அரசு புதிய டிஜிபியை உடனடியாக நியமிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதனால், தமிழகப் பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டார். பின்னர் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின்போது வெங்கடராமன் மாற்றப்பட்டு, சந்தீப்ராய் ரத்தோரை டிஜிபியாகத் தேர்தல் ஆணையம் நியமித்து உத்தரவிட்டது.
இந்தச் சூழலில், டெல்லியில் நடைபெற்ற மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியக் (UPSC) கூட்டத்தில், தமிழகத்தின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இறுதி செய்யப்பட்டு முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இன்று சென்னை தலைமை அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு அவர் தனது புதிய பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டார். டிஜிபியாகப் பொறுப்பேற்ற மகேஷ்குமார் அகர்வாலுக்கு உயர் காவல் அதிகாரிகள் பூங்கொத்துகள் வழங்கி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.




