“நேரம் ஒதுக்கவே இல்லை, அப்புறம் எப்படி ரத்து?” – முதலமைச்சர் விஜய் சந்திப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி விளக்கம்!
புதுடெல்லி:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனான சந்திப்பை ரத்து செய்துவிட்டதாக வெளியான தகவல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முதலமைச்சராகப் பதவியேற்ற பின் டெல்லி சென்றுள்ள விஜய், பிரதமர் மற்றும் நிதியமைச்சரைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துப் பேசுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவருக்கும் இடையே சந்திப்பு நிகழாததால், விஜய்க்கு அமித் ஷா ‘அப்பாயிண்ட்மெண்ட்’ கொடுக்காமல் சந்திப்பை ரத்து செய்துவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்தச் சூழலில், இத்தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், “முதலமைச்சர் விஜய் தரப்பில் இருந்து உள்துறை அமைச்சரைச் சந்திக்க நேரம் (Appointment) கேட்கப்பட்டிருந்தது உண்மைதான். ஆனால், அமைச்சரின் கால அட்டவணை காரணமாக அவருக்கு இன்னும் நேரம் ஒதுக்கப்படவே இல்லை; ஒரு சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கினால் மட்டுமே அதனை ரத்து செய்ய முடியும். எனவே, இந்த சந்திப்பு ரத்து செய்யப்படவில்லை, மாறாக இதற்கான நேரம் இன்னும் ஒதுக்கப்படவில்லை என்பதே உண்மை” என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசரப் பயணமாக இன்று குஜராத் செல்வதால், இன்றைய தினம் முதலமைச்சர் விஜயைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




