தமிழகத்தில் முழுமை பெறாத அமைச்சரவை: 22 துறைகளுக்கு அமைச்சர்கள் இல்லாததால் பட்ஜெட் தயாரிப்பில் முடக்கம்!
சென்னை:
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அமைச்சரவை இன்னும் முழுமையாக விரிவுபடுத்தப்படாததால் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் கடும் தொய்வடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகவும், அவருடன் 9 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர். இரு தினங்களுக்கு முன்புதான் முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள் (துறைகள்) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டைத் தாக்கல் செய்து, அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள வேண்டிய கட்டாயமும் அவசியமும் தற்போதைய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், வனம், சுற்றுச்சூழல், வேளாண்மை உள்ளிட்ட மிக முக்கிய 22 துறைகளுக்கு இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் காலியாகவே உள்ளன. இதன் காரணமாக, அந்தந்த துறைகளின் நிதித் தேவைகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்த முறையான ஆய்வுக் கூட்டங்களை நடத்த முடியாத தேக்க நிலை ஏற்பட்டுள்ளதாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர்களின் ஒப்புதல் மற்றும் வழிகாட்டுதல் இல்லாமல் பட்ஜெட் தயாரிப்புப் பணிகளை இறுதி செய்ய முடியாது என்பதால், திட்டமிட்டபடி பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய முடியாமல் தேதியைத் தள்ளிப்போட வேண்டிய கடுமையான நெருக்கடி புதிய அரசுக்கு உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.




