பாளையங்கோட்டை மத்திய மற்றும் கிளை சிறைகளில் அதிரடி: 26 காவலர்களை பணியிட மாற்றம் செய்து சிறைத்துறை உத்தரவு!
திருநெல்வேலி:
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறை மற்றும் அதன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கிளை சிறைகளில் பணியாற்றி வந்த 26 காவலர்களை வேறு சிறைகளுக்கு அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையின் கீழ் பல்வேறு மாவட்ட சிறைகளும், கிளை சிறைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சிறைத்துறை நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில் பாளை மத்திய சிறை கண்காணிப்பாளர் (அதிகாரி) செந்தாமரை கண்ணன் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, மத்திய சிறை மற்றும் கிளை சிறைகளில் நீண்ட நாட்களாகப் பணியாற்றி வந்த 26 முதல் நிலை சிறைக் காவலர்கள் (First Grade Jail Wardens) வெவ்வேறு சிறைகளுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். தற்போது விடுப்பில் இருக்கும் காவலர்கள், தங்களது விடுப்பு காலம் முடிந்தவுடன் உடனடியாக புதிய பணியிடங்களில் பொறுப்பேற்க வேண்டும் என்றும், பணியில் உள்ள மற்ற காவலர்கள் அனைவரும் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக புதிய சிறைகளில் பணியில் சேர வேண்டும் என்றும் அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, பயன்பாட்டில் இல்லாத மூடிய சிறைச்சாலைகளுக்குக் காவலர்களைப் பணியிட மாற்றம் செய்தது குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கும் சிறைத்துறை தரப்பில் தகுந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




