புதுச்சேரியில் மீண்டும் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தகவல்!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து வெளியாகியுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள், அங்கு மீண்டும் என்.டி.ஏ (அதிமுக – பாஜக – என்.ஆர். காங்கிரஸ்) கூட்டணி ஆட்சியமைக்கவே அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றன. Peoples Pulse கணிப்பின்படி, என்.டி.ஏ கூட்டணி 16 முதல் 19 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்கும் என்றும், காங்கிரஸ் கூட்டணி 10 முதல் 12 இடங்களைப் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், Axis My India மற்றும் சாணக்யா ஆகிய நிறுவனங்களும் என்.டி.ஏ கூட்டணி 16 முதல் 20 இடங்கள் வரை பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைக்கும் எனக் கணித்துள்ளன.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புதுச்சேரியில் களம் கண்டுள்ள நிலையில், அக்கட்சி ஒன்று முதல் 2 இடங்கள் வரை பிடிக்க வாய்ப்புள்ளதாக ஜேவிசி டைம்ஸ் நவ் மற்றும் சாணக்யா கணிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மற்ற முன்னணி கணிப்புகள் தவெக-விற்கு ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பில்லை என்றே கூறியுள்ளன. காங்கிரஸ் மற்றும் திமுக அடங்கிய கூட்டணி 6 முதல் 13 இடங்கள் வரை பெற்று எதிர்க்கட்சி வரிசையில் அமரும் என்று இந்த முடிவுகள் உணர்த்துகின்றன. தமிழகத்துடன் சேர்த்து புதுச்சேரியிலும் வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுமா என்பது உறுதியாகத் தெரியவரும்.






