“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்” – மீஞ்சூர் மாணவி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆவேசக் கண்டனம்!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவி ஒருவரிடம் கஞ்சா போதை இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை அதிகாரிகள் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
உயர்கல்வி பயின்று முன்னேற வேண்டும் என்ற கனவோடு இருந்த மாணவியை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பதுதான் ஸ்டாலின் மாடலா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என அவர் விமர்சித்துள்ளார். தமிழகத்தை ஒரு பொம்மை (Dummy) முதல்வர் ஆட்சி செய்தது போதும் என்றும், தமிழகம் செழிக்க வேண்டுமென்றால் திமுக வீழ்ந்தே ஆக வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.






