மயிலாப்பூர் திமுக வேட்பாளருக்கு எதிராக மீனவர்கள் போர்க்கொடி: கருப்புக்கொடி காட்டி போராட்டம்!
சென்னை மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் த.வேலுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பட்டினப்பாக்கம் அருகே உள்ள சீனிவாசபுரம் பகுதியில் மீனவர்கள் கருப்புக்கொடி ஏந்தி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த தேர்தலில் மீனவர்களுக்குப் பட்டா வழங்கப்படும் மற்றும் வீடுகள் கட்டித் தரப்படும் என அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து, மீனவர்கள் கருப்பு முகக்கவசம் அணிந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
மீனவர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகள் மற்றும் சம்மன்களுக்குத் தற்போதைய எம்.எல்.ஏ. த.வேலு தான் காரணம் எனவும், வீட்டுமனை பட்டா கோரி துணை முதலமைச்சர் உள்ளிட்டோரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மீண்டும் வாக்கு கேட்க வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த மீனவர்கள், வரும் தேர்தலில் திமுக வேட்பாளரைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.





