“இந்து தர்மத்தை திமுக கொச்சையாகப் பேசுகிறது” – மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா கடும் தாக்கு!
தமிழகத்தில் ஆட்சி நடத்தி வரும் திமுக அரசு, இந்துக்களையும் இந்து தர்மத்தையும் தொடர்ந்து கொச்சையாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பாஜக வேட்பாளர் நாகேஷ் குமாரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த அவர், திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை எனச் சாடினார். குறிப்பாக, சிலிண்டர் மானியத்தைக் குறைப்பதாகக் கூறிய வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக அரசு மக்களைப் பற்றிச் சிந்திக்காமல் தனது குடும்பத்தை மட்டுமே கவனித்து வந்ததாகக் குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் தற்போது 51 சதவீத மக்கள் போதைக்கு அடிமையாகியுள்ளதாகவும், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் நிலவுவதாகவும் அவர் கவலை தெரிவித்தார். இந்தச் செயல்பாடுகள் தமிழகத்தின் எதிர்காலத்தைச் சீரழிப்பதாக உள்ளதாக அவர் தனது உரையில் கடுமையாக விமர்சித்தார்.




