அன்னூர் அருகே கொடூரம்: சொத்து தகராறில் தந்தையைக் கல்லால் அடித்துக் கொன்ற மகன் கைது!
கோவை மாவட்டம் அன்னூர் அருகே சொத்து தகராறு காரணமாகத் தந்தையை மகனே அடித்துக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒன்னக்கரசம்பாளையத்தைச் சேர்ந்த முருகசாமி என்பவர், கடந்த ஆண்டு தனது சொத்துக்கள் அனைத்தையும் மகன் ராஜசேகர் பெயருக்கு எழுதிக் கொடுத்துள்ளார். எனினும், சொத்து கைக்கு வந்தவுடன் ராஜசேகர் தனது தந்தையைச் சரியாகக் கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த முருகசாமி, மகனுக்குக் கொடுத்த சொத்தை மீண்டும் மீட்டுத் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இது தொடர்பாகத் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ராஜசேகர், அருகில் கிடந்த கல்லை எடுத்து முருகசாமியின் தலையில் போட்டு அவரைக் கொலை செய்தார். தகவலறிந்து வந்த அன்னூர் காவல்துறையினர், முருகசாமியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, தலைமறைவாக இருந்த ராஜசேகரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.