“1500 ஆண்டுகள் பழமையான கோயிலைப் புறக்கணிப்பதா?” – அறநிலையத் துறைக்கு எதிராக இந்து முன்னணி போர்க்கொடி!
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட ராஜதானி கிராமத்தில் அமைந்துள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சிதிலமடைந்துள்ளதைக் கண்டித்து, இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் போது, இந்த ராஜதானி கோயிலில் இருந்து 18 கிராம மக்கள் முளைப்பாரியுடன் பாதயாத்திரையாகச் சென்று கள்ளழகருக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடைமுறை இன்றும் தொடர்கிறது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கோயிலை, கடந்த ஐந்து ஆண்டுகளாகத் திமுக அரசு சீரமைக்காமல் மெத்தனமாக இருப்பதாகக் குற்றம் சாட்டிய முருகானந்தம், இன்று கோயிலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பண்டைய காலத்துக் கோயிலைப் புனரமைப்பு செய்ய அறநிலையத் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில், தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.