பிரதமர் வருகை: திருப்பரங்குன்றத்தில் எஸ்பிஜி (SPG) படையினர் தீவிர பாதுகாப்பு ஆய்வு
மதுரை: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 1-ஆம் தேதி தமிழகம் வருகை தர உள்ளார். இதையொட்டி, மதுரை மண்டேலா நகரில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் அவர், அதனைத் தொடர்ந்து புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் தற்போது பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக, பிரதமரின் பாதுகாப்புப் பிரிவான எஸ்பிஜி (SPG) அதிகாரிகள் கோயிலை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துத் தீவிர ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை விமான நிலையம் முதல் கோயில் வரை அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.