வீரப்பூர் பொன்னர் – சங்கர் கோயில் மாசித் திருவிழா: கோலாகலமாக நடைபெற்ற வேடுபறி நிகழ்ச்சி!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூரில், புகழ்பெற்ற பொன்னர் – சங்கர் கோயில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வான வேடுபறி விழா மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு, பெரியக்காண்டியம்மன் கோயிலில் இருந்து சாம்புவன் காளை முன்னே செல்ல, பொன்னர் சுவாமி பட்டு உடுத்தி அம்பு ஏந்தியபடி குதிரை வாகனத்தில் பவனி வரும் நிகழ்வு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து, பெரியக்காண்டியம்மன் வெள்ளை யானை வாகனத்தில் எழுந்தருளி வர, தங்காள் குடத்தில் தீர்த்தம் எடுத்துச் செல்லப்பட்டது. அனியாப்பூர் குதிரைக்கோயிலில் அம்பு போடும் வேடுபறி நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. மக்கள் வெள்ளத்தில் சுவாமிகள் பவனி வந்தபோது, வழிநெடுகிலும் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலர்களைத் தூவி பக்திப் பெருக்குடன் வழிபாடு செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான பெரியகாண்டியம்மன் தேரோட்டம் நாளை காலை நடைபெற உள்ளது.