அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யத் தயக்கம்? நீதிமன்ற உத்தரவை அலட்சியப்படுத்தும் காவல்துறை!
நகராட்சி நிர்வாகத்துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் பெரும் நிதி முறைகேடு தொடர்பாக, நீதிமன்றம் உத்தரவிட்டும் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை இதுவரை வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி நிர்வாகத் துறையின் டெண்டர்கள் மற்றும் பணி நியமனங்களில் சுமார் 1,020 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பான ஆதாரங்களுடன், கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை வலியுறுத்தியும், நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது. இதனை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த முறைகேடு தொடர்பாக உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும், நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவு வந்த பிறகும், லஞ்ச ஒழிப்புத் துறை இதுவரை எவ்வித முதல் தகவல் அறிக்கையும் (FIR) பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.