ஈரோட்டில் பரபரப்பு: மானிய விலை யூரியாவை பதுக்கி விற்ற கும்பல் சிக்கியது – 30 டன் யூரியா பறிமுதல்!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே, மத்திய அரசின் மானிய விலை யூரியாவை ரகசியமாகப் பதுக்கி வைத்து வெளிச்சந்தையில் விற்பனை செய்ய முயன்ற கும்பலை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். காமராஜ் நகர் பகுதியில் பழனிச்சாமி என்பவருக்குச் சொந்தமான குடோனை, அகமத் அலி என்பவர் கடந்த இரண்டு மாதங்களாக வாடகைக்கு எடுத்து இயக்கி வந்துள்ளார். அங்கு விவசாயிகளுக்காக வழங்கப்படும் மானிய விலை யூரியாவை சட்டவிரோதமாகப் பதுக்கி, வடமாநிலத் தொழிலாளர்களைக் கொண்டு வெள்ளை நிற சாக்கு மூட்டைகளுக்கு மாற்றி, லாரிகள் மூலம் கடத்திச் செல்வதாகக் குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில், குறிப்பிட்ட குடோனில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 30 டன் யூரியா மற்றும் கோதுமை மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மத்திய அரசின் மானியத் திட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கடத்தல் பின்னணியில் இருப்பவர்கள் யார்? இதன் வலைப்பின்னல் எங்குவரை நீண்டுள்ளது? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.