தமிழகத்திற்கு முத்ரா யோஜனா திட்டத்தில் ரூ. 3.6 லட்சம் கோடி நிதி: மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்
மத்திய அரசின் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு இதுவரை 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த சேவை முகாமினைத் தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார். இந்த முகாமில் அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் மற்றும் இலவச எரிவாயு இணைப்பு உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் எல்.முருகனுடன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டு அரங்குகளைப் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எல்.முருகன், 2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வல்லரசாக்குவதே பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய இலக்கு என்று குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் 1 கோடியே 80 லட்சம் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 40 லட்சம் இலவச எரிவாயு இணைப்புகளைத் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.