மீனவர்களுக்கான மானிய டீசல் விநியோகத்தில் பெரும் முறைகேடு: சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஸ்ரீநாத் அதிரடி ஆய்வு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் அனைவரும் கடலுக்குச் சென்று வரும் சூழலில், மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை டீசல் விநியோகத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பது அமைச்சரின் அதிரடி ஆய்வில் தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள டீசல் விநியோக நிலையங்களில் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, மீனவர்களுக்கான ‘டீசல் மானிய அட்டைத் திட்டத்தின்’ (Diesel Subsidy Card Scheme) கீழ் விநியோகிக்கப்படும் மானிய விலை டீசலில் முறைகேடுகள் அரங்கேறி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மீனவர்களுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு 5 லிட்டர் டீசலுக்கும் சுமார் 100 மில்லி லிட்டர் டீசல் குறைவாக அளந்து வழங்கப்பட்டு வருவதாகக் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், ஒவ்வொரு டீசல் விற்பனை நிலையத்திலும் நாள் ஒன்றுக்குத் தோராயமாக 2,000 லிட்டர் வரை டீசல் இழப்பு (முறைகேடு) ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 37 நிலையங்களில் முறைகேடு; கடுமையான நடவடிக்கை பாயும் என அமைச்சர் எச்சரிக்கை!
ராயபுரத்தில் கண்டறியப்பட்ட இந்த மோசடியைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் சுமார் 37 டீசல் விற்பனை நிலையங்களிலும் இதே போன்ற முறைகேடுகள் தொடர்ச்சியாக நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தில் விளையாடும் இந்த முறைகேடு மற்றும் ஊழல் குறித்துக் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்திய மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், இந்த முறைகேட்டின் பின்னணியில் உள்ளவர்கள் மற்றும் ஊழலுக்குக் காரணமான அதிகாரிகள், ஊழியர்கள் மீது எவ்விதப் பாகுபாடுமின்றி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்டவட்டமாக உறுதியளித்துள்ளார்.




