நமது சிந்தனையைச் சிதறடிக்கப் பல்வேறு முயற்சிகள் நடைபெறுகிறது: காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிரடி உரை!
“நமது பாரம்பரியச் சிந்தனைகளையும் ஆன்மீக வழியையும் சிதறடிப்பதற்காகப் பல்வேறு புறச் சக்திகளின் முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன” என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் எச்சரித்துள்ளார். சென்னை நங்கநல்லூரில் இந்து மிஷன் சுகாதாரத்துறை சார்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அதிநவீன மருத்துவமனைக் கட்டிடத்தைக் காஞ்சி இளைய பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேரில் வருகை தந்து ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, அங்குள்ள இந்து சமுதாயக் கூடத்தில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களுக்குத் தனது ஆசியை வழங்கிப் பிரசாதங்களை விநியோகித்தார்.
அங்கு கூடியிருந்த ஆன்மீக அன்பர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள், “மத்திய அரசு இந்தியாவிற்குள் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், நமது நாட்டு மாணவர்கள் இன்னமும் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் சென்று பயிலும் நிலை நீடிக்கிறது. மாணவர்கள் தங்களது உயர்கல்வி மற்றும் மருத்துவப் படிப்புகளை இந்தியாவிலேயே தங்கிப் படிக்க முன்வர வேண்டும். நமது சிந்தனைகளை திசைதிருப்பவும் சிதறடிக்கவும் பல்வேறு மறைமுக முயற்சிகள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன; வெளிநாடுகளில் இருந்து சுரப்பான், கரப்பான் எனப் பல்வேறு அமைப்புகளும் நபர்களும் இங்கு வருகிறார்கள். எனவே, நமது பண்பாட்டிலும் கல்வியிலும் நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று ஆன்மீகக் கருத்துகளோடு கூடிய சமூக விழிப்புணர்வு உரையை ஆற்றியுள்ளார்.



