செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை ஒடுக்குவதா? தவெக அரசுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கடும் கண்டனம்!
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் ஒளிபரப்புச் சேவையிலிருந்து பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் 24×7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய மூன்று முக்கியத் செய்தித் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருப்பதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் நிலவும் மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து ஒளிபரப்பிய ஒரே காரணத்திற்காக, ஆளும் தவெக அரசு எதேச்சாதிகார போக்குடன் இந்த 3 சேனல்களையும் முடக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசுத் தரப்பில் கூறப்படும் தொழில்நுட்பக் காரணங்கள் எதிலும் உண்மையில்லை” என்று சாடியுள்ளார்.
மேலும் தவெக அரசின் இந்த நடவடிக்கையைச் சுதந்திரப் பத்திரிகை துறைக்கு எதிரானது என்று விமர்சித்துள்ள அவர், “ஜனநாயகத்தின் 4-ஆவது தூணான ஊடகங்களின் குரல்வளையை நெரிப்பதன் மூலம், தங்களது ஆட்சியின் அவலங்கள் மக்களிடம் சென்றடையாமல் தடுத்து விட முடியும் எனத் தவெக அரசு எண்ணுகிறது. அரசு நிர்வாகத்தின் மீதான விமர்சனங்களையும், மாற்றுக் கருத்துகளையும் எதிர்கொள்ள முடியாமல் ஊடகங்களை ஒடுக்க நினைப்பது தவெக அரசின் செயலற்ற தன்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடுமா?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். இறுதியாக, ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தைத் தவெக அரசு கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பை உடனடியாகத் தொடர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.



