அது எப்படி அவர்களுக்கு மட்டும் தொழில்நுட்பப் பிரச்சனை வரும்? தவெக அரசை சாடி அண்ணாமலை காரசாரக் கேள்வி!
தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் அவலநிலைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஊடகங்களின் ஒளிபரப்பு தடுத்து நிறுத்தப்படுவதாக எழுந்துள்ள புகார், அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள காரசாரமான சமூக ஊடகப் பதிவில், “குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் ஒளிபரப்பும் தற்காலிகமாகத் தடைப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டதற்கு முதலில் நன்றி. ஆனால், தவெக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும், செட்டாப் பாக்ஸில் (Set-top box) எப்படி திடீரென தொழில்நுட்பப் பிரச்சினைகள் வரும்?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ள அண்ணாமலை, “பொய்களையும், புரட்டுகளையும் மக்கள் மத்தியில் உண்மை என நம்பவைப்பதற்காக கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த ‘TN Fact Check’ வலைத்தளக் கணக்கு, தற்போதைய தவெக ஆட்சியிலும் அதே ஏமாற்று வேலையைத் தான் தொடர்ந்து செய்து வருகிறது. மக்கள் எதிர்பார்த்த அரசியல் மாற்றம் இதுவல்ல; இது ‘கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த, அதே டெய்லர், அதே வாடகை ஏமாற்று வேலை’ ஆகும்” என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் தவெக மற்றும் முந்தைய தி.மு.க அரசுகளை ஒப்பிட்டுச் சாடியுள்ளார்.




