சென்னை துறைமுகத்தில் நச்சு வாயு கசிவு விவகாரம்: தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கமளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!
சென்னை காமராஜர் சாலை மற்றும் தலைமைச் செயலகத்திற்கு எதிரே உள்ள வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த 2-ஆம் தேதி மதியம் திடீரென வெள்ளை நிறத்தில் ரசாயனப் புகை சூழ்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை துறைமுகத்தில் இருந்து கசிந்த இந்த நச்சு வாயு காரணமாக தலைமைச் செயலகம், ரிசர்வ் வங்கி மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் ஆகிய முக்கியப் பகுதிகளில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டதுடன், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகளும் ஏற்பட்டன. இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான அதிர்ச்சி செய்திகளின் அடிப்படையில், தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து (Suo Motu) வழக்காக விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் பிரசாந்த் கர்ஹவா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை துறைமுகத்தில் ஏற்பட்ட இந்த ரசாயன வாயு கசிவு குறித்தும், அதனால் ஏற்பட்ட காற்று மாசு மற்றும் பாதிப்புகள் குறித்தும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB), சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, விரிவான விளக்க அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.



