நீலகிரி, கன்யாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
மாவட்ட வாரியான மழை விபரங்களின்படி, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்யாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கோயம்புத்தூர், தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை நிலவரம்: “சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த சில மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.”
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தனது தினசரி அறிக்கையில் தெரிவித்துள்ளது.



