திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக செய்த தவறையே தவெக அரசும் செய்கிறது: தமிழிசை சௌந்தரராஜன் கடும் குற்றச்சாட்டு!
மக்களின் அடிப்படை உணர்வுகளை மதிக்கத் தவறிய காரணத்தினால்தான் திமுகவின் ஆட்சி முடிவுக்கு வந்தது என்று பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் தற்போதைய அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகும் கூட, மலை உச்சியில் தீபம் ஏற்ற விடமாட்டோம் என்று கூறுவது தற்போதைய ஆட்சியாளர்களின் ஆணவத்தின் உச்சத்தைக் காட்டுகிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் சாடினார். மேலும், இந்த விவகாரத்தில் முந்தைய திமுக அரசு செய்த அதே தவறைத்தான் தற்போதைய தவெக அரசும் தொடர்ந்து செய்து வருவதாக அவர் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
உணர்வுகளுக்கு மதிப்பு: “பொதுமக்களின் நீண்டகால உணர்வுகளை வெறும் மத உணர்வு என்று கூறி யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.”
தொடர்ந்து பேசிய அவர், திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது மட்டுமே ஒட்டுமொத்த ஹிந்துக்களின் ஒரே இலக்காகவும், முக்கிய கோரிக்கையாகவும் இருந்து வருகிறது என்றும் தனது பேட்டியில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.



