முந்தைய ஆட்சியாளர்களின் கமிஷன் தொகை இனி வரியாக மாற்றம்: அரசு கஜானாவில் செலுத்த முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!
கடந்த ஆட்சி காலங்களில் மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் வாயிலாக ஒரு குறிப்பிட்ட பெரும் தொகை அரசு கணக்கில் வராமல், தனி நபர்களுக்குக் கமிஷனாகச் சென்று கொண்டிருந்த முறைகேட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியாளர்களுக்கு மாதந்தோறும் மதுபான ஆலைகள் வழங்கி வந்த இந்த கமிஷன் தொகையை, இனி வரியாக மாற்றி நேரடியாக அரசு கஜானாவில் செலுத்த முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வச் செய்திக்குறிப்பில், டாஸ்மாக் நிறுவனம் வாயிலாக கடந்த 2025 – 26 நிதியாண்டில் ஆயத்தீர்வை வருவாயாக 11 ஆயிரத்து 836 கோடி ரூபாயும், மதிப்பு கூட்டு வரியாக (VAT) 39 ஆயிரத்து 10 கோடி ரூபாயும் அரசுக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற உடனேயே, பொதுமக்களின் நலன் கருதி கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே அமைந்திருந்த 717 மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாணை வெளியீடு: “தனி நபர்களுக்குச் சென்ற கமிஷன் தொகை குறித்த ஊடகங்களின் செய்திகள் முதலமைச்சரின் கவனத்திற்குச் சென்றதும், உடனடியாக அதனைத் தடுத்து நிறுத்த அரசு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, கடந்த 5ஆம் தேதி அதிகாரப்பூர்வ அரசிதழிலும் (Gazette) வெளியிடப்பட்டுள்ளது.”
இந்த புதிய விதிகளின்படி, இனிவரும் காலங்களில் மதுபானம், பீர் மற்றும் ஒயின் வகை பெட்டி (Case) ஒன்றுக்கு உரிமத் தொகையுடன் சேர்த்து கூடுதல் கட்டணமாக வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மதுபான வகைக்கு 90 ரூபாய், பீர் வகைக்கு 40 ரூபாய் மற்றும் ஒயின் வகைக்கு 20 ரூபாய் வீதம் மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் சேர்க்கப்படும். இந்த அதிரடி உத்தரவை முறைப்படி நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக, இடைத்தரகர்கள் இன்றி அரசுக்கு நேரடியாக ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் எனத் தமிழக அரசு மதிப்பிட்டுள்ளது.



