எல்&டி நிறுவனத்துடன் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து: 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி!
சென்னை:
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே ரூ.18,600 கோடி மதிப்பிலான மூன்று முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் மாநிலத்தில் சுமார் 8,200 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.15,000 கோடி முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ‘தகவல் தரவு மைய விரிவாக்கத் திட்டம்’ (Data Center Extension Project) செயல்படுத்தப்பட உள்ளது.
அதேபோல், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.2,500 கோடி முதலீட்டில் அதிநவீன ‘மின்னணு பொருட்கள் மற்றும் மின்னணு அமைப்புகள் உற்பத்தித் திட்டம்’ (Electronic Manufacturing Project) அமையவுள்ளது. இதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளியில் ரூ.1,100 கோடி முதலீட்டில் ‘L&T கப்பல் கட்டும் தளம் விரிவாக்கத் திட்டம்’ மேற்கொள்வதற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தொழில் துறையில் ஏற்பட்டு வரும் இந்த அசாத்திய வளர்ச்சி மற்றும் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கங்கள், தமிழக இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன.




