பெண்கள், குழந்தைகளை அவதூறாகப் பேசிய வழக்கில் திருச்சி சூர்யா கைது: யூடியூபர் முக்தாருக்கு வலைவீச்சு!
சென்னை:
பாஜக பெண் நிர்வாகி மற்றும் அவரது குழந்தைகளை மையப்படுத்தி இணையதளங்களில் தரக்குறைவாகப் பேசிய புகாரின் அடிப்படையில், முன்னாள் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யாவை சென்னை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பிரபல பாஜக பிரமுகரான அலிசா அப்துல்லா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், யூடியூபர் முக்தார் மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர் இணைந்து தன்னைப் பற்றியும், தனக்குப் பிறந்த இரட்டைச் சிறு குழந்தைகளைப் பற்றியும் சமூக ஊடகங்களில் மிக அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து பெண்கள் குறித்து அவதூறு பரப்பி வரும் அவர்கள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அலிசா அப்துல்லா தனது புகாரில் வலியுறுத்தியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த சென்னை சைபர் கிரைம் போலீசார், தீவிர விசாரணை நடத்தி திருச்சி சூர்யாவைக் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவரும், தற்போது தலைமறைவாக உள்ளவருமான யூடியூபர் முக்தாரைப் பிடிக்கப் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.






