சென்னை கேளிக்கை விடுதியில் மோதல்: இருசக்கர வாகனத்தில் சென்ற இலங்கை அகதிப் பெண் மீது கார் ஏற்றி கொடூரக் கொலை!
சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் கேளிக்கை விடுதியில் (Pub) ஏற்பட்ட நள்ளிரவுத் தகராறில், இளம் பெண் ஒருவர் மீது கார் ஏற்றி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த 18 வயதான யான்சி என்ற இளம்பெண், இன்ஸ்டாகிராம் (Instagram) சமூக வலைத்தளம் மூலமாகச் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் நட்பு ரீதியாகப் பழகி வந்துள்ளார். தனது தோழியை நேரில் பார்ப்பதற்காகச் சென்னை வந்திருந்த யான்சி, நேற்று இரவு கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கேளிக்கை விடுதிக்குச் சென்றுள்ளார்.
அங்கு அவர்கள் மது அருந்திவிட்டு நடனமாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த மற்றொரு தரப்பைச் சேர்ந்த நபர்களுடன் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது பெரும் தகராறாக மாறியுள்ளது. இதையடுத்து, விடுதியின் பாதுகாவலர்கள் (Bouncers) இருதரப்பினரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இருப்பினும், ஆத்திரம் அடங்காத இருதரப்பினரும் விடுதிக்கு வெளியேயுள்ள பிரதான சாலையிலும் ஒருவரையொருவர் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டுள்ளனர்.
கொடூரத் தாக்குதல்: இந்த மோதலைத் தொடர்ந்து, யான்சி தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து கிளம்பியுள்ளார். அப்போது, திமுக கொடி கட்டிய காரில் வந்த மற்றொரு தரப்பைச் சேர்ந்த சுமன் சக்திவேல் என்பவர், யான்சியின் இருசக்கர வாகனத்தின் மீது தனது காரை மிக வேகமாக ஏற்றியுள்ளார்.
இந்தக் கொடூரமான விபத்தில் சிக்கி, படுகாயமடைந்த யான்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவருடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த மற்றொரு சிறுமி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கோயம்பேடு காவல்துறையினர் உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேளிக்கை விடுதி மோதலில் பெண் ஒருவர் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தலைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




