டாஸ்மாக் கடையை மூடக் கோரி அரியலூர் டி. பாலூரில் பெண்கள் திரண்டு அதிரடிப் போராட்டம்!
அரியலூர்: அரியலூர் மாவட்டம் டி. பாலூர் பகுதியில் குடியிருப்பு மற்றும் பொது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் அரசு மதுக்கடையை உடனடியாக மூட வலியுறுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மதுக்கடையினால் தங்களின் வாழ்வாதாரமும், அமைதியும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டிய பெண்கள், கடைக்கு முன்பாக ஒன்றுகூடி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இப்பகுதியில் டாஸ்மாக் கடை செயல்படுவதால் மதுப்பிரியர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளதாகவும், இதனால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் மிகுந்த அச்சத்துடன் நடமாட வேண்டிய சூழல் நிலவுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்பாக இந்த மதுக்கடையை இப்பகுதியிலிருந்து நிரந்தரமாக அகற்றவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றவோ மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராட்டக் களத்தில் இருந்த பெண்கள் திட்டவட்டமாக வலியுறுத்தினர். பெண்களின் இந்த திடீர் போராட்டத்தால் டி. பாலூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.





