அதிமுகவிலிருந்து அடுத்த விக்கெட்: முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்!
திருச்சி / சென்னை:
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் உட்கட்சிப் பூசல்களுக்கு மத்தியில், அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் அதிகாரப்பூர்வமாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வெல்லமண்டி நடராஜன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் ஆவார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராகச் செயல்பட்டு வந்த அவர், ஓபிஎஸ் அவர்கள் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அதற்காக அவருக்கு அதிமுகவின் தலைமை அமைப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில், அதிமுக தலைமை மீது நிலவி வந்த அதிருப்தி காரணமாக, தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்தை நேரில் சந்தித்து வெல்லமண்டி நடராஜன் தவெக-வில் ஐக்கியமாகியுள்ளார். இவருடன் சேர்த்து, அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் கமலக்கண்ணன் தலைமையில், அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில நிர்வாகிகள், அம்மா பேரவை நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க டாஸ்மாக் பிரிவு மற்றும் மின்சாரப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு சார்பு அணிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் திரளாகத் தவெக-வில் இணைந்துள்ளனர். அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் திருச்சி பிராந்தியத்தில், மூத்த தலைவர் ஒருவர் நூற்றுக்கணக்கான நிர்வாகிகளுடன் தவெக-விற்கு மாறியிருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




