விஜய் வழங்கிய ரூ.20 லட்ச நிவாரணத் தொகையை திருப்பி அனுப்பிய கரூர் பெண் — காரணம் என்ன?
கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக (தமிழக வெற்றி கழகம்) நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
அந்த உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தவெக சார்பில் நிவாரணமாக தலா ரூ.20 லட்சம் வீதம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தவெக தலைவர் விஜய் நேற்று மாமல்லபுரத்தில் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் உயிரிழந்த கோடங்கிபட்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷின் மனைவி சங்கவி, விஜய் வழங்கிய ரூ.20 லட்ச நிவாரணத் தொகையை திருப்பி அனுப்பியுள்ளார்.
அவர் இதுகுறித்து கூறியதாவது:
“வீடியோ கால் மூலம் பேசும்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைக் காண நேரில் வருவதாக விஜய் கூறினார். ஆனால், பின்னர் அவர்களை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து சந்தித்தார். எனவே, எனது வங்கிக் கணக்கில் வந்த ரூ.20 லட்சத்தை திருப்பி அனுப்பிவிட்டேன்,” என தெரிவித்தார்.
சங்கவி மாமல்லபுரத்துக்கு செல்லாத நிலையில், ரமேஷின் தங்கை பூபதி மற்றும் உறவினர்கள் அர்ஜுனன், பாலு ஆகியோர் அங்கு விஜயைச் சந்தித்திருந்தனர்.