மோந்தா புயல் எச்சரிக்கை: ஏனாமில் இன்று மதியம் 12 மணி முதல் கடைகள் மூட உத்தரவு
மோந்தா புயல் வலுவாக நெருங்கி வருவதையடுத்து, புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் இன்று மதியம் 12 மணி முதல் அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை மூட மண்டல நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏனாம் மண்டல நிர்வாகி அங்கீத் குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:
“மோந்தா புயல் இன்று இரவு ஏனாம் மற்றும் காக்கிநாடா கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளது. மேலும், அக்டோபர் 30 வரை மிக கனமழை பெய்யும் அபாயம் உள்ளது.
புயல் பாதிப்பை சமாளிக்க, ஜே.சி.பி. மற்றும் மரம் வெட்டும் இயந்திரங்கள் உள்ளிட்ட அவசர வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24 மணி நேரமும் செயல்படும், தேவையெனில் ஜிப்மர் மருத்துவமனையும் அவசர சேவைக்குத் தயாராக இருக்கும்.
மோந்தா புயல் முன்னெச்சரிக்கையாக, மதுபானக் கடைகள், வணிக நிறுவனங்கள், மற்றும் பிற கடைகள் அனைத்தும் இன்று மதியம் 12 மணி முதல் மூடப்படும். குடிநீர் விநியோக நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீட்டுக்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மளிகை பொருட்கள், மருந்துகள், குடிநீர் ஆகியவற்றை முன்கூட்டியே சேமித்து வைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குடிசை வீடுகளில் வசிக்கும் மக்கள் அருகிலுள்ள நிவாரண முகாம்களை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவசரநிலை தொடர்பான உதவிக்காக 0884-2321223 மற்றும் 0884-2323200 என்ற கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்பு கொள்ளலாம்” என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.