“மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?” – தவெக அரசை நோக்கி அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சரமாரி கேள்வி!
சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்காக விரைவில் பூமி பூஜை மேற்கொள்ளப் போவதாகக் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் அறிவித்துள்ள சூழலில், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை மழுங்கடிக்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது; ஆனால், அதனைத் தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சி கைகட்டி வேடிக்கை பார்ப்பது, ஆட்சி மாறினாலும் மாறாத காட்சியாகவே நீடிக்கிறது” எனத் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் தனது அறிக்கையில், “தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் தயவில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஒரு பொய்க்கால் குதிரை அரசாகச் செயல்பட்டு வருவதால், கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்த்துத் ‘திடமான’ ஒரு நிலைப்பாட்டை எடுத்துப் பேச இந்த அரசுக்குத் துணிவிருக்கிறதா?” என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டும் பட்சத்தில் தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்கள் அனைத்தும் பாலைவனமாக மாறிவிடும் என அச்சம் தெரிவித்துள்ள அவர், பூமி பூஜை வரை பேசுவதற்குக் கர்நாடகாவுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது என வினா தொடுத்துள்ளார். எனவே, தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிரான தனது கடுமையான மற்றும் தெளிவான நிலைப்பாட்டை முதலமைச்சர் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கோரியுள்ளார்.



